ஆளும் மாநிலத்தில் பாஜக படுதோல்வி - முதல்வர் தொகுதியிலேயே கோட்டைவிட்டது

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூரில் பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லா தோல்வியடைந்தது பாஜகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால், கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எளிதாக வெற்றி பெற்றது. மாநில முதல்வராக சாமியார் ஆதித்யநாத் பொறுப் பேற்றார்.

அவர் ஏற்கனவே கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்ததால், முதல்வர் பதவிக்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல, அம்மாநிலத்தின் துணை முதல்வர்களில் ஒருவரான கேசவ் பிரசாத் மவுரியாவும் தனது பல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், காலியான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் மார்ச் 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக-வும் காங்கிரஸூம் தனித்துப் போட்டியிடும் நிலையில், திடீர் திருப்பமாக, இந்த தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதர வளிப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பூல்பூர் தொகுதியில் தொடக்கம் முதலே எதிர்கட்சியான சமாஜ்வாதி முன்னிலை வகித்து வந்தது. இந்த தொகுதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜகவின் கவுசிலேந்திர சிங் படேலை விடவும் 59,613 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

கோரக்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லாவை விடவும், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீண் குமார் இதில் 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>