மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது: டிவி தொடருக்கு 2 மாதம் தடை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 'ரங்கோணி' என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனல் இயங்கி வருகிறது. இந்த சேனலில் கடந்த 3 மாதங்களுக்கு முன் 'பேகம் ஜான்' என்ற ஒரு டிவி தொடர் தொடங்கியது. கதையின்படி நாயகனும், நாயகியும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நாயகிக்கு நாயகன் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த தொடரில் வரும் காட்சிகள் தங்களது மதத்தை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாலும் இந்த தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி 'ஹிந்து ஜாக்ரண் மஞ்ச்', அசாம் மாநில பிராமண இளைஞர் கவுன்சில் உட்பட பல்வேறு அமைப்புகள் கவுகாத்தி போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நடத்திய விசாரணையில், பேகம் ஜான் தொடர் மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வுகள் புண்படுவதாகவும், இதன்மூலம் கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த தொடருக்கு 3 மாதம் தடைவிதித்து கவுகாத்தி போலீஸ் கமிஷனர் குப்தா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தொடரை ஒளிபரப்பியதற்காக உடனடியாக விளக்கம் அளிக்கக் கோரி ரங்கோணி டிவிக்கு போலீசார் நோட்டீசும் அனுப்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த டிவி தொடர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக இந்த தொடரின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் பிரீதி கொங்கணா, தனக்கு ஆன்லைன் மூலம் பலமுறை கொலை மிரட்டல் வந்ததாகத் தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>