11 மாதம், 101 தடவை போக்குவரத்து விதி மீறல், ₹57,200 அபராதம்
சிலருக்குப் போக்குவரத்து விதிகளை மீறுவது என்றால் அலாதி பிரியம்.... சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் போடாமல், வேண்டுமென்றே ஒரு வழிப் பாதையில் செல்வது எனப் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் பலரை நாம் பார்த்திருக்கலாம். இதே வியாதி தான் பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார் என்பவருக்கும் இருந்து வந்தது. அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் போதும், பின்னர் அலுவலகம் முடிந்து வீட்டிற்குப் போகும்போதும் போலீசாரையும், போக்குவரத்து விதிகளையும் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சென்று வந்தார்.ஆனால் அவரது கணக்கில் அபராத தொகை கூடிக் கொண்டே வருவதை ராஜேஷ் அறிந்திருக்கவில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன் கோரமங்களா அருகே உள்ள விப்ரோ சந்திப்பு பகுதியில் வைத்து சிக்னலை மீறிச் சென்றதாக இவரைப் போக்குவரத்து போலீசார் பிடித்தனர். அன்று மட்டும் 6 முறை அவர் போக்குவரத்து விதிகளை மீறியிருந்தார். 3 முறை சிக்னலை மீறிச் சென்ற இவர், 2 முறை ஒரு வழிப் பாதையிலும் சென்றுள்ளார். இதையடுத்து அவரது பைக் நம்பரை வைத்துப் பரிசோதித்த போது கடந்த 11 மாதங்களில் 101 முறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தான் ராஜேஷ் புதிய என்ஃபீல்டு புல்லட் பைக் வாங்கினார். இதன்பின்னர் கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதி வரை ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 41 முறையும், சிக்னலை மீறிச் சென்றதற்காக 5 முறையும், பின்சீட்டில் ஹெல்மெட் இல்லாமல் பயணியை அழைத்துச் சென்றதற்காக 28 முறையும், பார்க்கிங் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக 3 முறையும், பைக் ஓட்டும் போது செல்போனில் பேசியதற்காக 10 முறையும் எனக் கடந்த 11 மாதங்களில் 101 தடவை இந்த வாலிபர் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது.
இதுவரை ஒரு தடவை கூட அவர் அபராதத் தொகை கட்டவில்லை. இதையடுத்து போலீசார் அபராத தொகையைக் கணக்குப் போட்டுப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.இதுவரை அவருக்கு வந்த அபராதத் தொகை ₹57,200. உடனடியாக ராஜேஷின் புல்லட்டை கைப்பற்றிய போக்குவரத்து போலீசார், அவருக்கு அபராத தொகை கட்டுவதற்காக ஐந்தரை அடி நீளத்தில் செல்லானையும் எழுதிக் கொடுத்தனர். 3 நாட்களுக்குள் பணத்தைக் கட்டினால் தான் புல்லட்டை திருப்பித் தர முடியும் என்று கூறி ராஜேஷின் பைக்கை போலீசார் கொண்டு சென்றனர். இந்த அபராத தொகையை ராஜேஷ் கட்டினால் பெங்களூரூவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிக அதிக தொகை கட்டும் நபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கும்.