தோழர் மியா கலிஃபா
ஒரு முறை மியா கலிஃபா அவர்களைத் தோழர் என்று குறிப்பிட்டதற்காகக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிய சிந்தனையாளர் ஒருவர் கோபித்துக் கொண்டார். தோழர் எனும் வார்த்தையை நான் இழிவு படுத்திவிட்டேனாமாம்.தோழர் என்ற வார்த்தையின் சாராம்சத்தை நவீன இந்தியக் கம்யூனிச மற்றும் மார்க்சிய ஆதரவாளர்கள் நாசப்படுத்திக் கொண்டிருப்பது தான் உண்மை.
நூற்றாண்டுகளுக்கு முன் தான் பார்த்துப் பழகிய கடற்கரையை ஒட்டி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளையும் அவர்களைச் சுரண்டும் அதிகார வர்க்கத்தையும் குறித்து வர்க்க ரீதிய ஒடுக்குமுறையைத் தளமாக நிறுத்தி காரல் மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட புத்தகமே Das Capital. அதில் இந்திய நாட்டின் அடிநாதமாக இருந்து அரித்துக் கொண்டிருக்கும் சாதிய கட்டமைப்பு என்பதே இல்லை. இன்றளவும் மூலதனம் எனும் காரல் மார்க்ஸ் அவர்களின் தத்துவத்தைத் தாங்கி பிடிக்கும் " சில " கம்யூனிஸ்ட்கள் சாதி என்பதை மறுக்கக் காரணம், அதைப் பற்றி கம்யூனிச தலைவர்கள் எழுதவில்லை என்பதனால் மட்டுமல்ல, தங்களுக்குள் இருக்கும் சாதிய வன்மத்தை வெளிக்காட்டாமல் அரசியல் செய்ய ஏதுவாக போய்விட்டது என்பதால் தான். கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிய கட்சியில் மத நம்பிக்கை இல்லாமல் போகலாம், ஆனால் சாதி தழைத்தோங்கி நிற்கிறது.
தமிழகத்தில் ரங்கராஜன் துவங்கி தலைமையில் சீதாராம் யெய்சூரி என இருப்பவர்கள் அனைவருமே உயர்சாதியினர் தான். தங்களது கட்சியிலேயே சமத்துவத்தை நிலைநாட்ட முடியாத அவல நிலைக்கு இடதுசாரி இயக்கங்கள் இந்தியாவில் தள்ளப்பட்டுள்ளன. உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பாராளுமன்றத்திலும், ராஜ்ய சபாவிலும் குரல் கொடுத்தது இரண்டே கட்சிகள் தான் ஒன்று திமுக , இன்னொன்று அதிமுக. இவர்களைத் தவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கம்யூனிஸ்ட்கள், முதல் வரிசையில் நின்று மத்திய அரசுக்குச் சாமரம் வீசி ஆதரவு அளித்தது அனைவருக்குமே ஞாபகம் இருக்கும்.
பிரபல தெலுங்கு மார்க்ஸிய எழுத்தாளரான ரங்கநாயகம்மா மார்க்சிய போர்வையை போர்த்திக் கொண்டு சனாதன தர்மத்தை வேறொரு அப்டேட்டட் வெர்சனாக எழுதி புத்தகங்களை வெளியிடுகிறார். அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதில் அம்மையாருக்கு ஆஸ்கார் விருதே அளிக்கலாம். இந்த இந்திய மண்ணில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணலின் அரசியலமைப்பு சாசனத்தின் மீதான வன்மம் தான் ரங்கநாயகம்மாவின் பேனா முனையிலிருந்து வெளிவருகிறது.
ஒரு புத்தகத்தில் " பிராமணர்களே ஒடுக்கப்பட்ட மக்களிடம் நெருங்கிச் சென்றாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள் " என்பது போன்ற விசத்தை பேனாமையில் தடவி, காகிதங்களில் கம்யூனிச பசையை ஒட்டி ரங்கநாயகம்மா எழுதி தள்ளியிருக்கிறார். தனது எல்லா புத்தகங்களுக்கும் அட்டை அணிவிக்கிறாரோ என்னமோ, பூணூலை அணிவித்து விடுகிறார். இவர்கள் தான் சமத்துவத்தைக் காக்கப் போகும் தோழர்களா ?
லெபனான் நாட்டில் நடந்த குண்டுவெடிப்புக்காகக் கோடிக்கணக்கில் நிதியை ஏலம் மூலமாகவும், மக்களிடமிருந்தும் திரட்டி அங்குப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகக் களத்தில் நின்று உதவி செய்கிறார் மியா கலிஃபா. அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் சமீப காலங்களில் லெபனான் நாட்டின் பலவீனமான அரசையும், அங்கு இருக்கும் பழமைவாதத்தையும் கேலி செய்யும் பதிவுகளைக் காண முடிகிறது. ஏற்கனவே தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல் களமாடும் மியா, இப்போது லெபனான் அரசின் கண்களுக்கும் உறுத்தலாக இருக்கிறார். லெபனான் நாட்டில் குண்டுவெடிப்பினால் இடுபாடுகளில் தங்கள் வீடுகளை இழந்த மக்களை அந்த நாட்டு அரசு கைது செய்வதைக் கண்டித்து நடன வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் மியா.
இப்போது நான் யாரைத் தோழர் என்று சொல்வதில் அதிக பெருமை அடைய முடியும் ?
சாதியை கட்டிப்பிடித்துக் கொண்டு கம்பு சுத்தும் நவீன இந்திய இடதுசாரிகளையா ? இல்லை, ஆனது ஆகட்டும் என களத்தில் நிற்கும் மியா கலிஃபாவையா ?
தோழர் மியா கலிஃபா அழகு....