இந்த வருஷம் விற்பனை ரொம்ப மோசம்.... தோவாளை பூ வியாபாரிகள் கலக்கம்

'பூ'வுக்கு பேர் போன இடம் தோவாளை என அனைவருக்கும் தெரியும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் கூட இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வருடத்தில் எல்லா மாதங்களிலும் தாராளமாக பூ கிடைக்கும் என்பது தான் தோவாளையின் சிறப்பம்சமாகும். இந்நிலையில் கொரோனா இங்குள்ள பூ விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கு காரணமாகத் திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் பலவும் ரத்து செய்யப்பட்டதால் கடந்த சில மாதங்களாகவே தோவாளை பூ மார்க்கெட் மிகவும் 'டல்'லாக காணப்படுகிறது.

தோவாளை கேரள மாநிலத்தை ஒட்டி இருப்பதால் பெரும்பாலும் திருவனந்தபுரம் உள்படக் கேரளாவின் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் தினமும் டன் கணக்கில் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக ஓணம் பண்டிகையின் போது பெருமளவு பூக்கள் விற்பனையாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் 10 நாட்கள் வீடுகள் முன் பூக்கோலம் இடுவார்கள். இதனால் தினமும் 10 முதல் 15 டன் வரை பூக்கள் விற்பனையாகும். இவ்வருடம் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணத்தின் முந்தைய நாள் மட்டும் 30 முதல் 35 டன் வரை பூக்கள் விற்பனையாகும்.

ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதாலும், வெளிமாநிலத்தில் இருந்து பூக்களைக் கொண்டு வந்தால் கொரோனா பரவும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாலும் இவ்வருடம் வழக்கமாக நடைபெறும் விற்பனையில் பாதி கூட இல்லை என்று பூ வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து பூக்களைக் கொண்டு வரலாம் எனக் கேரள அரசு உத்தரவிட்ட போதிலும் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் ஓணம் பண்டிகையும் தோவாளை பூ வியாபாரிகளை ஏமாற்றிவிட்டது.

More News >>