சபரிமலையில் நாளை பக்தர்கள் இல்லாத ஓண விருந்து

மலையாளிகளின் முக்கிய பண்டிகையான திருவோணம் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் நடை திறந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்பட்டது. வழக்கமாகச் சபரிமலையில் ஓணம் பண்டிகைக்கு 4 நாட்கள் 'ஓண சத்யா' என அழைக்கப்படும் ஓண விருந்து பரிமாறப்படுவது உண்டு. 50 வருடங்களுக்கு மேலாக இந்த நடைமுறை உள்ளது.

இந்த நாட்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தலைவாழை இலையுடன் தடபுடலாக விருந்து பரிமாறப்படும். ஆனால் இவ்வருடம் கொரோனா பீதி காரணமாகக் கடந்த 5 மாதங்களுக்கு மேலாகச் சபரிமலையில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சபரிமலையில் நாளையும், திருவோண தினமான 31ம் தேதியும் ஓண விருந்து வழங்கப்படுகிறது. நாளை சபரிமலை கோவில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி சார்பிலும், 31ம் தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பிலும் ஓண விருந்து அளிக்கப்படுகிறது. ஆனால் விருந்தை ருசிக்கப் பக்தர்களுக்குத் தான் வாய்ப்பு இல்லை. ஓணம் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் செப்டம்பர் 2 ம் தேதி இரவு சபரிமலை நடை சாத்தப்படும். அன்றுடன் ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகள் நிறைவடையும்.

More News >>