குரங்கணி காட்டுத் தீ விபத்து... உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில், சிகிச்சை பலனின்றி மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் விஸ்வா கார்டனைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் உயிரிழந்தார். இதனால், குரங்கணி தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை யில், “குரங்கணியில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம், மலையேற்றம் செல்வதற்காக வனத்துறை வகுத்துள்ள விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா, மலையேற்த்திற்குச் செல்ல ஏற்பாடு செய்தவர்கள் ஏதேனும்விதிமுறைகளை மீறியுள்ளனரா என்பது குறித்து விசாரணை அதிகாரி விசாரிப்பார்.
வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற பரிந்துரை களையும் அவர் இரண்டு மாத காலத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com