பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - சசிதரூரிடம் மன்னிப்பு கேட்ட எம்.பி
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்கு பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியும் சில காங்கிரஸ் தலைவர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் டெல்லியில் உள்ள வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் தான் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. சசி தரூருக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் கூறுகையில், 'சசி தரூர் ஒரு கெஸ்ட் ஆர்டிஸ்டாகத் தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். இப்போதும் அவர் ஒரு கெஸ்ட் ஆர்டிஸ்ட் ஆகவே தொடர்ந்து கொண்டிருக்கிறார்' என்று கூறினார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் கொடிக்குன்னில் சுரேஷின் கருத்து தனக்கு மனவேதனையை ஏற்படுத்தியதாக சசி தரூர் கூறினார்.
இதையடுத்து கொடிக்குன்னில் சுரேஷ் சசி தரூரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறுகையில், 'நான் கூறிய கருத்து சசி தரூருக்கு வேதனையை ஏற்படுத்தி இருந்தால் நான் பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரை தனிப்பட்ட முறையில் காயப்படுத்த வேண்டும் என நான் எண்ணவில்லை' என்றார்.