11வது துணைத் தலைவர்.. அண்ணாமலைக்கு பதவி வழங்கிய பிஜேபி!

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் திரும்பியவர் விவசாயம், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்தார். இதற்கிடையே,கடந்த 25ம் தேதி பாஜகவில் சேர்ந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். அப்போது மாநில பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.

பாஜகவில் இணைந்தபோதே அவருக்கு பெரிய பொறுப்பு தரப்படலாம் எனப் பேசப்பட்டு வந்தது. ஆனால், கட்சியில் இணைந்த பிறகு பேசிய அண்ணாமலை, ``கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை என்றும் கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன்" என்று கூறினார்.

இதற்கிடையே, அண்ணாமலை, தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநிலத் துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ் நரேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம், எம்.என். ராஜா, மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சி கவிதாசன் ஆகியோர் வரிசையில் 11 வது துணைத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்க உள்ளார்.

More News >>