பாப்புலர் நிதி நிறுவன மோசடி இன்டர்போல் விசாரணை
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 55 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பாப்புலர் நிதி நிறுவனம். தற்போது இந்த நிதி நிறுவனத்திற்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஹரியானா கர்நாடகா உட்பட மாநிலங்களில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் சில கிளைகள் திடீரென மூடப்பட்டன. படிப்படியாக கேரளாவில் உள்ள இந்த நிறுவனத்தின் மேலும் சில கிளைகள் மூடப்பட்டன.
இதையடுத்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான தாமஸ் டேனியல், இவரது மனைவியும் நிர்வாக பங்குதாரருமான பிரபா டேனியல் மற்றும் இவர்களது 2 மகள்களும் திடீரென தலைமறைவானார்கள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் வைத்து துபாய்க்கு தப்பி செல்ல முயன்றபோது தாமஸ் டேனியலின் 2 மகள்களும் பிடிபட்டனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: பாப்புலர் நிதி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக விசாரிக்க ஐ ஜி ஹர்ஷிதா அட்டல்லூரி மேற்பார்வையில் பத்தனம்திட்டா எஸ்பி சைமனின் தலைமையில் 25 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் 2 மகள்கள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டனர்.
இவர்களை கேரள போலீசார் கைது செய்து இன்று பத்தனம்திட்டாவுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் டேனியல் மற்றும் அவரது மனைவி பிரபா ஆகியோரை சங்கனாச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.