பெண்கள் குறித்த அவதூறு பதிவுகள்: புதிய கண்டுபிடிப்பு

பெண்களைக் குறித்த அவதூறு பதிவுகளை இனம் காண்பதற்கான படிமுறையை ஆஸ்திரேலியாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது டிவிட்டர் பதிவுகளைக் கொண்டு மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படிமுறையை மற்ற தளங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பல்வேறு அவதூறு பதிவுகள் செய்யப்படுகின்றன. பெண்களைப் பற்றியும் அவதூறான பதிவுகள் அநேகம் உலாவருகின்றன. தற்போது தங்களைக் குறித்த அவதூறான பதிவினை பயனர் இனம் கண்டுதான் அது குறித்துக் குறிப்பிட்ட சமூக ஊடக நிறுவனத்திடம் முறையீடு செய்ய முடியும்.

இயந்திர வழி கற்றல் (machine learning) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவதூறு பதிவுகளை இனம் காண முடியுமா என்ற ஆராய்ச்சியை ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழக குழுவினர் மேற்கொண்டனர்.இக்குழுவினர் 10 லட்சம் டிவிட்டர் பதிவுகளைக் கொண்டு இவ்வாராய்ச்சியைச் செய்தனர். பெண்களைப் பற்றிய முன்முடிவுகளைக் கொண்ட பாலியல் மற்றும் அவதூறு பதிவுகளை இனம் காண்பது குறித்த படிமுறையை (algorithm) உருவாக்குவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வெறும் வார்த்தைகளைக் கொண்டு மாத்திரமே இனம் காணாமல் எந்தச் சூழ்நிலையில், என்ன நோக்கத்தில் அப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற பின்னணியில் ஆராயும்வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, மோசமான நடத்தை கொண்ட பெண், பாலியல் வன்புணர்வு போன்ற வார்த்தைகளை (whore, slut, rape) கொண்டு 10 லட்சம் பதிவுகளைத் தெரிவு செய்து, பின்னணியைக் குறித்து ஆய்வு செய்ததில் 5,000 பதிவுகளை மட்டுமே இந்த படிமுறை அவதூறானவையாக அடையாளம் காட்டியுள்ளது. இப்போது வரை அவதூறான பதிவுகளை 75 சதவீதம் இது சரியாக அடையாளம் காட்டியுள்ளது என்று அப்பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ருச்சி நாயக் கூறியுள்ளார். அவதூறு பதிவுகளை இனம் காண்பது மிகவும் சிக்கலான செயல்பாடு என்று கூறியுள்ள அவர், இப்படிமுறைக்கு Long Short-Term Memory with Transfer Learning என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடக நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தினால், முறையீடுகள் வரும் முன்னதாகவே பெண்களைப் பற்றிய அவதூறு பதிவுகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இனவெறி, மாற்றுத்திறனாளிகள் குறித்த அவதூறு உள்ளிட்ட பல்வேறு வகை மோசமான பதிவுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய படிமுறைகளை உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More News >>