3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக், செல்போன் 'பாசக்கார' பெற்றோர் கைது
கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் மாவட்டத்திலுள்ள தினக்கல் என்ற இடத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் வைத்தே அந்த குழந்தையை விற்பதற்கு தாயும், தந்தையும் திட்டமிட்டனர்.
இந்த விவரம் மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் தீவிரமாக கண்காணித்ததால் அவர்களால் குழந்தையை விற்க முடியவில்லை. பின்னர் அந்தத் தாய் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற்கிடையே இவர்கள் தங்கள் குழந்தையை விற்க திட்டமிட்டிருப்பது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒரு புரோக்கருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த புரோக்கர் இருவரையும் அணுகி, தனக்கு தெரிந்த குழந்தை இல்லாத ஒரு தம்பதி இருப்பதாகவும், அவர்களுக்கு ₹1 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்துவிடலாம் என்றும் கூறி ஆசை காட்டியுள்ளார். இதை தொடர்ந்து அந்த குழந்தையை ₹1 லட்சத்திற்கு விற்பனை செய்தனர். அந்த பணத்தில் குழந்தையின் தந்தை ₹50,000க்கு ஒரு பைக்கும், ₹15,000 மதிப்புள்ள ஒரு செல்போனும் வாங்கினார். இந்த விவரம் அப்பகுதியினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது குழந்தையைக் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பெற்றோர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கணவன் மிரட்டியதால் தான் குழந்தையை விற்க சம்மதித்ததாகவும், குழந்தையை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த தாய் போலீசில் கூறியுள்ளார்.