மின்னணு பணபரிமாற்றம்.. கட்டணம் வசூலிக்கத் தடை..
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.மக்கள் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து, ரூபே கார்டு, பீம்-யு.பி.ஐ போன்ற பல்வேறு முறைகளில் மின்னணு பணப் பரிமாற்றங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படி மின்னணு பணப்பரிமாற்றம் செய்வதற்கென தனியாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஏற்கனவே கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் நோட்டிபிகேஷன் வெளியிட்டது. மேலும், இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.ஆனாலும், சில வங்கிகள் அந்த விதிமுறைக்கு முரணாக மின்னணு பணப்பரிமாற்றத்திற்குக் கட்டணம் வசூலித்துள்ளதாக மத்திய அரசுக்குப் புகார்கள் சென்றன.
இதையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப் பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், இனி வருங்காலத்திலும் இதற்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.