நீட், ஜே.இ.இ தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா?

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நாளை(செப்.1) முதல் தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் தள்ளிப் போடப்படுமா? அல்லது திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்த தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த போதிலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்ட போதிலும் மத்திய அரசு இதை நடத்தி வருகிறது.அதே போல், ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஜே.இ.இ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால், இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. செப்.1ம் தேதி முதல் செப்.6ம் தேதி வரை ஜே.இ.இ. தேர்வுகளும், செப்.13ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என 7 மாநில அரசுகள், இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளன. ஆனால், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருக்கிறது.இந்த சூழலில், நாளை முதல் தேர்வுகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும், சுப்ரீம் கோர்ட் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்குமா, மத்திய அரசின் முடிவில் மாற்றம் வருமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

More News >>