கொரோனா ஊரடங்கு விழுங்கும் 53 வருட சினிமா தியேட்டர்.. சென்னையின் அடையாளங்கள் தரைமட்டமாகின்றன..
கொரோனா உலகை அச்சுறுத்தி லட்சக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் கைவரிசை அதிகமாகவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். இது தவிர பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம், வேலை போன்ற நாசங்களை ஏற்படுத்தியது. இதுவொரு பேரிடராக மக்களுக்கு அமைந்துள்ளது. கடந்த 5 மாதமாகத் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் செப்டம்பர் வரை ஊரடங்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்கள் மூடி தூசி படிந்து களையிழந்து காணப்படுகிறது அதைச் சுத்தம் செய்யப் பல ஆயிரங்கள் வைத்தாக வேண்டும். வருமானமே இல்லாமல் எப்படி செலவு செய்வது என்ற அதிர்ச்சியில் சென்னையின் வடசென்னையின் அடையாளமாக இருக்கும் அகஸ்தியா சினிமா தியேட்டர் தரைமட்டமாக உள்ளது. தியேட்டர்கள் வரிசையில் இது கொரோனா வாங்கும் முதல் பலி.கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை தலை கீழாக மாறத் தொடங்கியது. வட சென்னை, தண்டார் பேட்டை அகஸ்தியா திரையரங்கம் 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கே.பால சந்தர் இயக்கிய பாமா விஜயம் என்ற படம்தான் இதில் முதல் படமாகத் திரையிடப்பட்டது. இப்படத்தில் முத்து ராமன், நாகேஷ், சவுகார் ஜானகி நடித்திருந்தனர். 1004 இருக்கைகள் கொண்ட பெரிய தியேட்டர்.
எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன், போலீஸ் சிஐடி யாக நடித்த காவல்காரன், போராளியாகச் சிவாஜி நடித்த சிவந்த மண் மற்றும் சொர்க்கம், ரஜினியின் பைரவி, ப்ரியா, கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் உள்படப் பல படங்கள் நூறு நாட்கள் மற்றும் வெள்ளிவிழாகள் இந்த தியேட்டரில் கண்டுள்ளன.சென்ற 53 வருடமாக அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களையும் மகிழ்வித்து வந்த அகஸ்த்தியா தியேட்டர் சென்ற 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. நாளை முதல் அதாவது செப்டம்பர் 1ம் தேதியுடன் இந்த தியேட்டர் மூடப்படுகிறது.
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிய இந்த தியேட்டர் கொரரோனா ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர் பெறுவது கடினமே. இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு கமர்ஷியல் காம்பளக்ஸ் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.அதேபோல் தான் சென்னையின் அடையாளமாக அண்ணாசாலையில் இயங்கி வந்த நடிகர் திலகம் சிவாஜியின் சாந்தி தியேட்டர் மற்றும் ஆனந்த் தியேட்டர் ஆகியவை இடித்துக் கடந்த ஆண்டுகளில் கமர்ஷியல் வளாகமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.