பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும், 3 மாதச் சிறையும் விதிக்கப்படும்.சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

கடந்த ஜூன் 27ம் தேதி பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தாத நிலையிலும் ஜனநாயகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதையும், அதில் நீதிமன்றங்களும் எப்படி பங்கு பெற்றன என்பதையும், குறிப்பாக கடைசியாக பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கு என்ன என்பதை பற்றியும் பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.

அதே போல், ஜூலை 29ம் தேதி போட்ட ட்விட்டில், ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு மக்கள் நீதி பெற முடியாமல் தவிக்கும் நேரத்தில், பாஜக பிரமுகர் ஒருவரின் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக்கில் தலைமை நீதிபதி பாப்டே, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த 2 பதிவுகளுக்காக பிரசாந்த் பூஷன் மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து அவருக்கு கடந்த ஜூலை 22ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அவமதிப்பு வழக்கில் பூஷனுக்காக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த 14ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கான தண்டனை குறித்து முடிவெடுக்கப்படாமல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க நீதிபதிகள் 2 முறை வாய்ப்பு அளித்தனர். ஆனால், அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில்மனுவிலும் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த சூழலில், பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், சுப்ரீம் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தும் பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில், நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இன்று பூஷன் மீதான அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் வழக்கறிஞர் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு அவர் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிப்பதாகவும், 3 மாத சிறைத் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் நீதித்துறை வட்டாரங்களிலும் மீடியாக்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் பூஷன் மீது இன்னொரு அவமதிப்பு வழக்கும் உள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் தெகல்கா பத்திரிகைக்கு பிரசாந்த் பூஷன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தலைமை நீதிபதிகளின் ஊழல்கள் குறித்து குற்றம்சாட்டியிருந்தார். இதை அப்போது வக்கீல் ஹரீஷ் சால்வே, சுப்ரீம் கோர்ட் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனடிப்படையில், பிரசாந்த பூஷன் மீது அந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த 2வது அவமதிப்பு வழக்கு செப்.10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

More News >>