2021 தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி?!.. என்ன சொல்கிறார் பிரேமலதா
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். வருகிற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே எங்கள்தொண்டர்களின் கருத்தாக உள்ளது. எனினும், வரும் ஜனவரியில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி, அதில் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில், விஜயகாந்த் முடிவை அறிவிப்பார். வருகிற தேர்தல் தேமுதிகவிற்கு திருப்புமுனை வெற்றியை தரும்.
தேர்தலில் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார். தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிக இல்லாமல் யாரும் கூட்டணி அமைக்க முடியாது. எனினும் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடவே வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மு.கருணாநிதி, ஜெயலலிதா போன்ற 2 பெரிய ஆளுமைகள் இல்லை. இதனால், அதிமுக, திமுக இல்லாத மாற்று அரசியல் தமிழகத்தில் வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால் 2021 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது" என்று கூறியுள்ளார்.