கோவை, சேலம், கடலூரில் மீண்டும் கொரோனா பரவல்.. சென்னையிலும் தொடர்கிறது..
சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது, கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களிலும் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது.தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தற்போது கோவை, சேலம், கடலூர் போன்ற மாவட்டங்களில் மீண்டும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.31) 5956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 31 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 28,041 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6008 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 68,141 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 91 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7322 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 35,597 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 347 பேருக்கும், கோவையில் 589 பேருக்கும், சேலத்தில் 496 பேருக்கும், கடலூரில் 307 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 299 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 187 பேருக்கும், விழுப்புரத்தில் 176 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. செங்கல்பட்டில் இது வரை 26,109 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17,357 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 24,778 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து வருகிறது.