தளர்வுகள் அமல்.. இ-பாஸ் ரத்தானது... சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்..
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. கோவிட்19 தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல்வேறு புதிய தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் இ-பாஸ் இல்லாமல், மக்கள் பயணம் செய்யலாம். அதே சமயம், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்தந்த மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது. எனினும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சொந்த ஊருக்குச் சென்றிருந்தவர்களில் பெரும்பாலானோர் கார். வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்னைக்குத் திரும்பி வந்தனர். இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அந்த சாலையின் பல இடங்களில் அதிக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சென்னை புறநகர்களான சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால், அப்பகுதி மக்களும் சிரமப்பட்டனர். போக்குவரத்து போலீசார் அங்கு வந்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று காலையிலேயே கோயில், மசூதி, சர்ச்சுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர்க் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் இரவு 9 மணி வரை நீடிக்கலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களும் இன்று முதல் நூறு சதவிகித பணியாளர்களுடன் செயல்பட உள்ளன. அதே சமயம், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல்குளங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் போன்றவற்றுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல், கல்வி மற்றும் பொது விழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் மறு உத்தரவு வரும் வரை தொடர உள்ளது.