கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜே.இ.இ. தேர்வு தொடக்கம்.. தமிழகத்தில் 53 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு..

நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜே.இ.இ தேர்வு இன்று(செப்.1) காலை தொடங்கியது. தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்த தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த போதிலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்ட போதிலும் மத்திய அரசு இதை நடத்துகிறது.

அதே போல், ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஜே.இ.இ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால், இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. திட்டமிட்டபடி, செப்.1ம் தேதி முதல் செப்.6ம் தேதி வரை ஜே.இ.இ. தேர்வுகளும், செப்.13ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி, இன்று ஜே.இ.இ தேர்வு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 660 தேர்வு மையங்களில் மொத்தம் 9 லட்சத்து 53,473 மாணவ, மாணவியர் ஜே.இ.இ தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 34 தேர்வு மையங்களில் 53,765 பேர் தேர்வு எழுதுகின்றனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஒரு ஷிப்டில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 32 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும், தேர்வு மையங்களில் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி தரப்படுகிறது. மேலும், கைகளைக் கழுவுவதற்கு போதிய தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு அமைப்பின் இயக்குனர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, குஜராத்தில் 23 மாவட்டங்களில் 38 ஆயிரத்து 167 மாணவர்கள், ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு எழுதவிருப்பதாக மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்திருக்கிறார்.

More News >>