நிறுத்தி வைத்திருந்த காரில் திடீர் தீ... சானிடைசர் காரணமா?

கொரோனா அச்சம் காரணமாக இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகத்தில் மாஸ்க்குடனும், கையில் சானிடைசருடனும் தான் கிளம்பிச் செல்கின்றனர். சானிடைசரை அதிகமாகப் பயன்படுத்துவது கைகளுக்கு ஆபத்து என்று கூறப்பட்டாலும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகனங்களில் இதை வைப்பதால் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் பைக் பெட்ரோல் டேங்க் மீது சானிடைசரை வைத்திருந்ததால் பைக் தீ பிடித்து எரிந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை.

இந்நிலையில் ஒடிஷாவில் நிறுத்தி வைத்திருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதற்கும் சானிடைசர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. புவனேஸ்வரை சேர்ந்த சஞ்சய் பத்ரா என்பவர் அங்குச் சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். நேற்று மதியம் 2 மணி அளவில் தனது காரில் மெடிக்கல் ஷாப்புக்கு புறப்பட்டார். தனது கடைக்குச் சிறிது தொலைவில் காரை நிறுத்தினார். இறங்குவதற்கு முன் ஸ்டீயரிங், டேஷ் போர்டு, சீட் ஆகியவற்றை சானிடைசரால் தூய்மை செய்தார். இதன்பின் கார் டேஷ்போர்டில் சானிடைசர் பாட்டிலை வைத்துவிட்டு காரை பூட்டி விட்டுச் சென்றார். அடுத்த சில நிமிடங்களிலேயே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீப்பிடித்தற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் சந்தேகிக்கின்றனர். முதலாவது, காரில் மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது காரில் வைத்திருந்த சானிடைசர் கசிந்து இன்ஜினுக்குள் சென்று அதன்மூலம் தீப்பிடித்து இருக்கலாம். கொரோனா அச்சத்தால் சஞ்சய் பத்ரா அடிக்கடி கார் முழுவதும் சானிடைசரை பயன்படுத்தி தூய்மை செய்து வந்துள்ளார். ஆனால் சானிடைசரால் தீப்பிடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும், ஒருவேளை சஞ்சய் பத்ரா, சானிடைசர் பாட்டிலை காருக்குள் வைக்கும்போது மூடியை மூடாமல் இருந்திருக்கலாம் என்றும், அதனால் ஆல்கஹால் கார் முழுதும் பரவி ஒருவேளை தீப்பிடித்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எது எப்படியோ முடிந்தவரை சானிடைசரை கவனமாகக் கையாளுவது நல்லது.

More News >>