திமுக பொதுச் செயலாளர் பொருளாளர் தேர்தல்.. செப்.9ல் கூடும் பொதுக்குழு..
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்.3ம் தேதியும், பொதுக் குழு கூட்டம் செப்.9ம் தேதியும் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரை தேர்வு செய்வதற்காக கடந்த மார்ச் 29ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொதுக்குழு கூடும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்பின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புவதாகக் கூறி, ஏற்கனவே அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால், பொதுச் செயலாளர் பதவியுடன், பொருளாளர் பதவிக்கும் பொதுக்குழுவில் தேர்தல் நடக்கும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், பள்ளி கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், பொதுக் குழு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 9ம் தேதியும், முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 3ம் தேதியும் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக பொதுக் குழு கூட்டம் செப்.9ம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும்.
முன்னதாக, செப்.3ம் தேதி காலை 10.30 மணியளவில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், பொருளாளர் பதவியைப் பிடிக்க சில மூத்த தலைவர்களிடையே போட்டி நிலவுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.