இந்தியா, சீனா படைகள் நேருக்கு நேர் அணிவகுப்பு.. கிழக்கு லடாக்கில் பதற்றம்..

கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறியுள்ளது. இதனால், இந்திய ராணுவப் படைகளும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே அவ்வப்போது குவிக்கப்படுகின்றன. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்திலும் தொடர்ந்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டு படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.ஆனால், சீனா அந்த இடத்தில் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்தது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், 59 சீன மொபைல் ஆப்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. சீனா மீது பொருளாதார ரீதியாகத் தடைகளை விதிக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில், மீண்டும் சீனாவின் ராணுவப் படைகள் (மக்கள் விடுதலைப் படை), எல்லை தாண்டி ஊடுருவி வருகிறது. கடந்த ஆக.29ம் தேதி இரவில், ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.பாங்காங் ஏரியின் வடக்கு கரையோரத்தில் சீன ராணுவத்தின் இந்த ஊடுருவல் முயற்சியை இந்தியப்படையினர் முறியடித்ததாகவும், சீன ராணுவம் தன்னிச்சையாக அங்கிருக்கும் சூழலை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால், அதைத் தடுக்கும் விதத்தில் தங்களது நிலையைப் பலப்படுத்தி உள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறி இருக்கிறது. இதையடுத்து, இந்தியாவும் பீரங்கி வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் ராணுவப் படைகளை அங்கு அணி வகுத்து நிற்கச் செய்திருக்கிறது. இதனால், எல்லையில் மீண்டும் போர் பதற்றம் அதிகமாகி இருக்கிறது.

More News >>