எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணமாக மாற்றிய நடிகர்.. 25 பாகமாகப் படமாக்கினார்..

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவைச் சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கிக் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர்.இந்நிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர் (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில்(Net Boss Channel) பதிவேற்றியுள்ளார் பஷீர்.. இந்த வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மற்ற சோஷியல் மீடியாக்களிலும் பார்க்க முடியும்.

பத்திரிகையாளர் மணவை பொன். மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர் ஆகிய இரண்டு புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த அருமையான, சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் படித்து நெகிழ்ந்துபோன பஷீர், அவற்றைக் காலத்தால் அழிக்க முடியாத வீடியோ பதிவுகளாக மாற்றும் முயற்சியில் உடனே இறங்கினார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த வீடியோக்கள் உருவாக்கும் பணியைத் துவங்கிய இவர், இதற்காக சுமார் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இத்தனைக்கும் காரணம் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர் மீது கொண்ட தீராத காதல் என்கிறார் ஜெ. எம். பஷீர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:என் தந்தை எஸ்.எம்.ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார். எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே தவிர, அப்பா மூலமாக அவரைப்பற்றி கேட்டபடியே ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாகத் தான் வளர்ந்தேன். அவரை பார்த்துத்தான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை வளர்த்துக் கொண்டேன்.இந்த புத்தகங்களைப் படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம் ஜி ஆர் அவர்களைப் பற்றி ஏற்கனவே நான் அறிந்து கொண்ட விஷயங்கள் இவற்றை ஏன் ஒரு வரலாற்று ஆவணமாக, அடுத்து வரும் இளைய தலை முறைக்குத் தெரியப்படுத்தும் விதமாக, வீடியோக்களாக உருவாக்கக் கூடாது என, என் மனதில் தோன்றியது. இதோ கடந்த 60 நாட்கள் இடைவிடாத உழைப்பில் அந்த பணியைத் திருப்திகரமாகச் செய்து முடித்துவிட்டேன்.. இதுவரை இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளார்கள்.

வெளிநாடுகளில் வாழும் எம் ஜி ஆரின் ரசிகர்கள் இலங்கை, சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான் , துபாய் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போன் செய்து என்னைப் பாராட்டிய தோடு அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை சொல்லி அத்தனையும் பேசச் சொன்னார்கள். இந்த கொரோனா காலத்தில் மனச் சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெ. எம். பஷீர்.

More News >>