கொரோனா பாய்ச்சல்: உச்சம் தொட்ட ஸூம் பங்குகள்
கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் தொழில், வர்த்தகம் அனைத்தும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் வெளியே செல்லமுடியாத, ஒருவரையொருவர் நேரடியாகச் சந்திக்க இயலாத இந்த நெருக்கடியும் சில தொழில்களுக்கு ஏறுமுகத்தை அளித்துள்ளது.கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாபம் பார்த்துள்ள நிறுவனங்களுள் ஸூம் முக்கியமானது. வீட்டிலிருந்தபடியே வேலை, ஆன்லைன் வகுப்புகள் என்று கொரோனா கொண்டு வந்த கட்டாயங்களால் ஸூம் அதிகப்படியான வருவாயை ஈட்டியுள்ளது.ஜூலை 31 வரையிலான மூன்று மாதங்களில் ஸூம் நிறுவனப் பங்கு விற்பனை 355 சதவீதம் உயர்ந்து 663.5 மில்லியன் டாலருக்கு நடந்துள்ளது. ஒரே ஆண்டில் நான்கு மடங்கு விற்பனை உயர்ந்துள்ளதால் ஜனவரி வரையிலான நிதியாண்டில் விற்பனை 2.39 பில்லியனாக இருக்கும் என்று ஸூம் நிறுவனம் கூறியுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸூம் நிறுவனம் 50 மில்லியனுக்கு மேற்பட்ட பங்குகளைக் கொண்டுள்ளது. அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான எரிக் யுவான் இந்த ஆண்டில் அதிகம் லாபம் பெற்றவர்களுள் ஒருவராவர். ஸூம் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் ஐந்து மடங்கு அதிகம் உயர்ந்த நிலையில் அவர் 12.8 பில்லியன் (ஒரு பில்லியன் நூறு கோடியாகும்) டாலர் ஈட்டியுள்ளார். ஸூம் நிறுவனத்தின் ஆரம்பக் கால முதலீட்டாளர்களுள் ஒருவரான லிகா-ஷிங் ஒரே நாளில் 2 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஸூம் நிறுவனப் பங்குகள் 26 சதவீதம் கூடி 410 டாலராக உயர்ந்துள்ளது. இதே வேகம் தொடர்ந்தால் ஸூம் தலைமை செயல் அதிகாரி 20 பில்லியன் டாலரைத் தாண்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொழில்நுட்ப வர்த்தக உலகில் ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பெஸோஸின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் உயர்ந்ததும், கடந்த மாதம் டெஸ்லா நிறுவனத்தில் எலோன் மஸ்கின் மதிப்பு 24 மணி நேரத்தில் 8 பில்லியன் டாலராக உயர்ந்ததும் சாதனையாக இருக்கிறது. எரிக் யுவான் அவர்களைக் கடப்பாரா என்பது வரும் நாட்களில் தெரியும்.