ரூ 500 கோடி முடங்கியிருக்கும் நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது.. அண்ணாத்த, வலிமை படப்பிடிப்பு எப்போது?
தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. கொரோனா பரவலால் ஏற்பட்ட இந்த பாதிப்பால் கோலிவுட்டில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி இருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்திய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் 25 ஆயிரம் பெப்ஸி தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன் அன்றாட தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாதபடி அவதிப்பட்டனர். ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, அஜீத் நடிக்கும் வலிமை, விக்ரம். கார்த்தி, ஜெயம் ரவி போன்றவர்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு முடங்கி இருந்தது.
இந்நிலையில் பாரதி ராஜாவின் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கத் தலைவர் அரசிடம் படப்பிடிப்பு நடத்த அனுமதி தர வேண்டும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை அரசு வழங்கியது. இதையடுத்து படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் சூனா பானா படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் நடிகர்கள் அப்புக் குட்டி, சாம்ஸ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர். விரைவில் மற்ற படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளது. அதேசமயம் பெரிய படங்களான ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, அஜீத் நடிக்கும் வலிமை படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று உறுதியாகவில்லை.
இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் தொடங்கினாலும் ரஜினி இல்லாத காட்சிகளைப் படமாக்கி முடிக்க இயக்குனர் சிவா திட்டமிட்டு வருகிறார். அஜீத் படப் பிடிப்பைச் சென்னையில் நடத்துவதா அல்லது ஐதராபாத்தில் நடத்துவதா என்று ஆலோசித்து வருகின்றனர். இரண்டு படங்களுமே 2021 பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிடும் யோசனையில் பட நிறுவனங்கள் உள்ளன.ஷூட்டிங் தொடங்கிய நிலையில் தற்போது தியேட்டர் திறப்புக்கு திரையுலகினர் கோரிக்கை வைக்கத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே தியேட்டர் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் பாரதிராஜாவும் ஷூட்டிங் தொடங்கினால் மட்டும் போதாது தியேட்டர்கள் திறந்தால்தான் எல்லோருக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார்.