நிபந்தனைகள் தளர்வால் கூடுதல் ரயில்களை இயக்க முடிவு

இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல கடந்த சில மாதங்களுக்கு முன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது 230 சிறப்பு ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் 120 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அனுமதி அளித்தால் விரைவில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். எந்தெந்த பகுதிகளுக்கு இடையே ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>