பிரசவத்திற்கு கட்டணம் குழந்தை
ஆக்ராவை சேர்ந்தவர் சிவ் சரண். ரிக்ஷா தொழிலாளியான இவரது மனைவி பபிதா (36). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பபிதா மீண்டும் கர்ப்பிணியானார். இதையடுத்து பிரசவத்திற்காக அவர் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 24ம் தேதி பபிதாவுக்கு குழந்தை பிறந்தது. சிசேரியன் என்பதால் பிரசவ கட்டணம் ₹35 ஆயிரம் ஆனது. ஆனால் அவ்வளவு பெரிய தொகையை கட்டுவதற்கு சிவ் சரணிடம் பணமில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் கூறியபோது, குழந்தையை தங்களிடம் தந்தால் ₹1 லட்சம் தருவதாகவும், பில் தொகையை கட்ட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து வேறுவழியில்லாமல் குழந்தையை அந்த தனியார் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இருவருக்கும் படிப்பறிவு இல்லாததால் மருத்துவமனையில் கொடுத்த பேப்பர்கள் எதையும் படித்துப் பார்க்காமல் கைவிரல் ரேகையும் பதித்து விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு சிவ் சரண் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த விவரம் எப்படியோ வெளியே தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இது மிகவும் மோசமான சம்பவம் என்றும், இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு என்.சிங் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகி சீமா கூறியது: ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பதால் இந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று கூறி பெற்றோர் தான் எங்களிடம் குழந்தையை தர முன்வந்தனர். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. குழந்தையை தத்து கொடுக்க தயார் என்று அவர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர் என்று கூறினார்.