தமிழகத்தில் கொரோனா பலி 7418 ஆக அதிகரிப்பு... சிகிச்சையில் 52 ஆயிரம் பேர்
தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 33,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 3 லட்சத்து 74,172 பேர் குணம் அடைந்துள்ளனர். 7418 பேர் உயிரிழந்துள்ளனர். 52 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனாவுக்கு இது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோயால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புக்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், உலகில் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தி, நோய் பரவாமல் தடுத்தனர். இந்தியாவிலும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. படிப்படியாகத் தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.
தமிழகத்திலும் தினமும் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.1) 5928 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 33,969 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6031 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 74,172 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 96 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7418 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 ஆயிரத்து 379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1083 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 36,697 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 384 பேருக்கும், கோவையில் 577 பேருக்கும், சேலத்தில் 335 பேருக்கும், கடலூரில் 286 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 296 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 191 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் 128 பேர், திருவண்ணாமலை 154, திண்டுக்கல் 111, கள்ளக்குறிச்சி 209 பேர் என்று நேற்று தொற்று கண்டறியப்பட்டது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவிக் கொண்டுதான் இருக்கிறது. செங்கல்பட்டில் இது வரை 26,509 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17,256 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 25,051 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.