சிஏஏ சட்டத்திற்கு எதிராக அசாமில் மீண்டும் மாணவர் போராட்டம்..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது.இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சிறுபான்மையினரும் இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்தனர்.

அதே சமயம், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு இந்த சட்டத்தால் குடியுரிமை கிடைக்கும். அதன் மூலம் தங்கள் சொத்துக்களுக்கும், மொழி, கலாச்சாரத்திற்கும் பங்கம் ஏற்படும் என்று அம்மாநிலத்தில் உள்ள பூர்வ குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுகாத்தியில் போராட்டங்களை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். இதற்குப் பின்னர், கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்து போராட்டங்களும் ஓய்ந்திருந்தன.

இந்நிலையில், அசாமில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. அசாம் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று திப்ரூகரில் தீப்பந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். சிஏஏ சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் அந்த மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொடங்கியுள்ளது.

More News >>