கோவிட்-19: மற்றவர்களைச் சந்திக்கும்போது கவனிக்க வேண்டியவை
கொரோனாவுக்காக போடப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், கோவிட்-19 கிருமி பரவல் கட்டுக்குள் இல்லை. நாள்தோறும் புதிதாய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரைக்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது மட்டுமே நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழியாகும். நண்பர்களை, தோழியரை முகமுகமாய் சந்தித்துப் பேசி மாதக்கணக்காகிப் போன நிலையில், நேரடியாகச் சந்திப்பதற்கு மனம் ஏங்கும். ஆனால், கோவிட்-19 கிருமி பரவல் முழு உலகையும் பாதித்துள்ளது என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆகவே, மற்றவர்களைச் சந்திக்கும் போது கடைப்பிடிக்கவேண்டியவற்றைப் பார்க்கலாம்.
நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்க முடிவெடுக்கும்போது, உண்மையில் அவர்களை நேரில் பார்ப்பது அவசியமா? என்ற கேள்வியை ஒன்றுக்கு மூன்று முறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது என்ற கோணத்திலேயே சந்திப்புகளை நோக்க வேண்டும். நீங்களோ, சந்திக்க இருப்பவரோ நோயால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டவர்களாய் இருந்தால் நிச்சயம் தவிர்க்கவேண்டும். வீட்டில் முதியவர்கள் இருந்தால், குடும்பத்தில் யாருக்காவது வேறு உடல்நல பலவீனங்கள் இருந்தால், உங்கள் மூலம் அவர்களுக்கு கோவிட்-19 பரவி உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது என்பதற்காகச் சந்திப்பைத் தவிர்த்து விடுங்கள். அவசியம் இல்லாவிட்டால் யாரைச் சந்திப்பதையும் தவிர்ப்பது நல்லது.
முககவசம் - அலட்சியம் வேண்டாம்
நோய் இன்னும் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் முக கவசம் கண்டிப்பாக அவசியம். வீட்டிலிருந்து வெளியில் சென்றால் முக கவசத்தைக் கண்டிப்பாக அணியவும். வெளியில் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் இடையே குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். போதிய இடைவெளி இருந்தாலும் குறைந்தாலும் முக கவசத்தை எடுக்கக்கூடாது. நண்பர்களைப் பார்க்கும்போது முக கவசத்தை அணிந்து கொண்டு பேசுவது தொந்தரவாகத் தோன்றலாம். ஆனால், இது உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதை மறந்து போகாதிருங்கள்.
உணவகங்கள் வேண்டாம்
இரவு பார்ட்டி, குளிரூட்டப்பட்ட உணவகங்களில் சந்திப்பு இவற்றையெல்லாம் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். நண்பர்களை, உறவினர்களைச் சந்திக்கத் திட்டமிட்டால், திறந்தவெளியிலான இடங்களில் சந்தியுங்கள். கூடுமானவரை நோய்க்கிருமிகள் தொற்றாமல் தடுக்க இது உதவும்.
உணவினை பகிர்ந்து கொள்ள வேண்டாம்
தோழியின் சாப்பிடும் தட்டை தொடுவது, அருந்து பானத்தைத் தொடுவது இவை நோய்த் தொற்றிற்குக் காரணமாகலாம். தின்பண்டங்களைக் கொடுப்பதில் அபாயம் குறைவாகத் தோன்றலாம். ஆனால், ஒருவர் கை இன்னொருவர் மேல் படுவதால், கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணவினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கட்டித் தழுவுதலுக்கு நோ
இதயத்திற்கு எவ்வளவு நெருங்கிய நண்பர் என்றாலும் கட்டித் தழுவக்கூடாது. இது கொரேனா காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நண்பர்களை, உறவினர்களை வெளியே சந்திக்க நேர்ந்தால் கைக்குலுக்கவோ, கட்டித்தழுவவோ கூடாது. முழங்கையை மடக்கித் தொட்டுக்கொள்ளலாம்; சிலர் பாதங்களை மோதி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. தவிர்க்க இயலாமல் வெளியில் சென்றால் முக கவசம் அணியுங்கள்; கைகளைச் சுத்திகரிப்பதற்கு சானிடைசரை எப்போதும் வைத்திருங்கள்.