சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான கறவை மாடு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எதற்காகக் கடன் வழங்கப்படுகிறது ?

பயனாளிக்கு அதிகபட்சம் இரண்டு கறவை மாடுகள் வாங்க ஆவின் (AAVIN) நிறுவனம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

ஒரு கறவை மாட்டுக்கு ரூபாய் 25,000 மற்றும் இரண்டு கறவை மாடுகள் என்றால் ரூபாய் 50,000 வரை கடனுதவி வழங்கப்படும்.

தகுதிகள்

அ. விண்ணப்பதாரர் இசுலாமியர், கிறித்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பாரசீகியர் இதில் ஏதாவது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆ. குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவர் எனில் ரூ.54,500/- மற்றும் கிராமப்புறம் எனில் ரூ.39,500/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இ. வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு ?

இக்கடனுக்கு ஆண்டு வட்டி விகிதம் 6 விழுக்காடு மட்டுமே ஆகும்.

கடன் தொகையில் பயனாளி அளிக்கவேண்டிய பங்குத் தொகை எவ்வளவு விழுக்காடு ?கடன் வழங்கப்படும் தொகையில் பயனாளியின் பங்குத் தொகை 5 விழுக்காடு ஆகும். மீதமுள்ள 95 விழுக்காடு கடன் டாம்கோ நிறுவனத்தால் ஆவின் (யுயுஏஐN) மூலம் வழங்கப்படும்.

கடன் தொகையினை எவ்வளவு மாத காலத்தில் திரும்பச் செலுத்தவேண்டும்?அதிகபட்சம் 36 மாத காலத்தில் கடன் தொகை திரும்பச் செலுத்தப்படவேண்டும்.

கடன் வழங்கப்படும் முறை என்ன ?

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் பயனாளிகளைத் தேர்வு செய்து ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பும். ஆவின் பரிந்துரை செய்யும் பயனாளிகளுக்குக் கடன் வழங்கப்படும். கடன் தொகை டாம்கோ நிறுவனத்திலிருந்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு அளிக்கப்படும். இச்சங்கம் பயனாளிக்குக் கடன் தொகையை அளிக்கும்.

More News >>