1 மாதத்திற்குள் 8 முறை - சிறுவனை விடாமல் துரத்திய பாம்பு..!
தமிழில் 'நீயா' படம் வந்த பின்னர் பெரும்பாலானோருக்கு பாம்பு மீதிருந்த பயம் மேலும் அதிகரித்தது. பாம்புகளுக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நீயா படத்தில் வருவது போல அவை பழிவாங்குமோ என்கிற பயம் தான் அதற்கு காரணம்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுவனை ஒரு பாம்பு துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவம் நடந்துள்ளது. 1 மாதத்திற்குள் இதுவரை 8 முறை அந்த சிறுவனை பாம்பு கடித்துள்ளது . இந்த 8 முறையும் ஒரே பாம்பு தான் அவனை கடித்துள்ளது என்பது தான் அதிர்ச்சியூட்டும் விஷயமாகும். உத்திரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரமவுலி மிஸ்ரா. இவரது மகன் யாஷ்ராஜ் மிஸ்ரா (17).
இந்நிலையில் கடந்த மாதம் வீட்டுக்கு வெளியே வைத்து அந்த சிறுவனை ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக அவனை அந்த கிராமத்தில் உள்ள டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அடுத்தடுத்து ஒரு மாதத்தில் மேலும் 6 முறை அந்த சிறுவனை பாம்பு கடித்தது. ஒவ்வொரு முறையும் அந்த சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதின் காரணமாக உயிர் பிழைத்து வந்தான். ஆனால் பலமுறை முயற்சித்தும் அந்த பாம்பை வீட்டினரால் பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து 7 முறை பாம்பு கடித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் அவனை அருகில் பகதூர்பூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு உறவினரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வைத்தும் யாஷ்ராஜை பாம்பு கடித்தது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் யாஷ்ராஜின் வீட்டுக்கு அருகே வைத்து கடித்த அதே பாம்பு தான் சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள பகதூர்பூர் கிராமத்திற்கும் வந்து கடித்தது என்பதுதான். ஏன் ஒரே பாம்பு அந்த சிறுவனை துரத்தி துரத்தி கடிக்கிறது என யாருக்கும் புரியவில்லை. இதனால் எனது பையனை இப்போது வீட்டை விட்டு வெளியே எங்கும் அனுப்புவதில்லை என்று யாஷ்ராஜின் தந்தை கூறுகிறார்.