சினிமா படப்பிடிப்பு இல்லாததால் லாட்டரி விற்கும் நடிகர்

கொரோனா கொள்ளை நோயால் வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். கொரோனாவால் சினிமா துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கு மட்டும் ₹500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடிய சண்முகம் என்ற குள்ள நடிகர் பிழைப்புக்காக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' என்ற படத்தில்தான் சண்முகம் அறிமுகமானார். அதன்பின்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு வந்தார்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாலும், நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததாலும் சண்முகம் வருமானம் இன்றி தவித்து வந்தார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த சில மாதங்களாக இவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளார். தினமும் பல கிலோமீட்டர் நடந்து லாட்டரி விற்பனை செய்து வருகிறார். சில சமயங்களில் தன்னை விட வறுமையில் வாடுபவர்களைக் காணும்போது இலவசமாக ஒரு டிக்கெட்டையும் கொடுக்கத் தவறுவதில்லை. ஒருவேளை லாட்டரி அடித்தால் அவர்களுக்கு நல்லது தானே என்று வறுமையிலும் சிரித்தபடி இந்த சண்முகம் கூறுகிறார்.

More News >>