சீனாவுக்கு எதிராக அடுத்த அதிரடி.. பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை!

இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. அப்போதே இன்னும் பப்ஜி உள்ளிட்ட மேலும் பல செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தற்போது பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ப்ரண்டஸ உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளைத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்களின் நலன் கருதியும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ``பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருவதாகத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன" என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவம் சில நாட்களாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகிறது. இதனையடுத்தே மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையைச் செய்துள்ளது.

More News >>