வீடுகள் மீது தொடர் கல்வீச்சு வீசியது யார்?
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஒரு குமரகத்தில் நாலுபங்கு என்ற சிறிய கிராமம் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள சில வீடுகள் மீது திடீரென கற்கள் வந்து விழுந்தன. அப்பகுதியைச் சேர்ந்த ரெஜி, உதயகுமார், ஷிஜு, தீபு, ரவீந்திரன் ஆகிய 5 பேரின் வீடுகள் மீது தான் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் பீதியடைந்த அந்த வீட்டினர் வெளியே வந்து பார்த்தபோது யாரையும் காணவில்லை. ஆனாலும் கல்வீச்சு தொடர்ந்தது. கற்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மதியம் ஒன்றரை மணி வரை கல்வீச்சு தொடர்ந்தது.
இதில் இரண்டு வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து குமரகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீடுகளின் மீது வீசப்பட்ட கற்களை வாங்கி போலீசார் பரிசோதித்தனர். ஆனால் போலீசாரால் வீடுகள் மீது கல்வீசியது யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கல்வீச்சு சம்பவம் ஒரு மர்மமாகவே உள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.