கொரோனா பாதித்து இறந்த தந்தையின் மரணத்திற்காக சீன அரசுடன் மல்லுக்கட்டும் இளம்பெண்
சீனாவில் உள்ள வுஹானில் தான் கொரோனா முதலில் பரவத் தொடங்கியது. தற்போது நோய் அங்கு கட்டுக்குள் வந்தாலும் முழு அளவில் நோயின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில் தனது தந்தை கொரோனா பாதித்து மரணமடைய சீன அரசு தான் காரணம் என்று கூறி அரசுக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளார் ஒரு இளம்பெண். வுஹானை சேர்ந்த சாவோ லீய் என்ற இளம்பெண் தான் சீன அரசுக்கு எதிராக போராட துணிந்துள்ளார். இதுகுறித்து ஸ்கை நியூஸ் டிவி சேனலிடம் அவர் கூறியது: கொரோனா பரவலின் முதல் கட்டத்தில் அந்த வைரஸ் குறித்த உண்மைத் தகவல் எதையும் சீன அரசு வெளியிடவில்லை. அதனால் பொதுமக்கள் யாராலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. அனைத்துமே வழக்கம் போலவே நடந்தன. சீன புத்தாண்டு கொண்டாட்டங்களில் திரளானோர் கலந்துகொண்டனர். இதன் காரணமாகத் தான் இந்த வைரஸ் மிக வேகமாக பரவியது. ஆயிரக்கணக்கானோரின் உயிர் பறிபோனது. கடந்த ஜனவரி மாதம் தான் என்னுடைய தந்தைக்கு நோய் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனைக்கு நாங்கள் தகவல் தெரிவித்த போதிலும் ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை. நோயால் பாதிக்கப்பட்ட எனது தந்தையை அழைத்துக் கொண்டு 6 மைல் நடந்த பிறகு ஒரு வாகனத்தை பிடித்து மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் நோய் தீவிரமடைந்ததால் எனது தந்தையை காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணத்திற்கு சீன அரசு தான் பொறுப்பாகும். வைரசின் தன்மை குறித்து எந்த தகவலையும் பொதுமக்களிடம் தெரிவிக்காமல் சீன அரசு மூடி மறைத்துவிட்டது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பேற்று அரசு எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்.
என்னுடைய குடும்பத்திடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். சீன அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன். இது தொடர்பாக நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளேன். எனது நாட்டுக்காகத் தான் நான் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளேன். எனது தந்தைக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்று கூறினார்.