ஐந்தே நாளில் ரூ. 3,076 கோடி?!.. இது `பிஎம் கேர்ஸ் சர்ச்சை

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக `பிஎம் கேர்ஸ் என்பது பிரதமர் மோடியால் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும், நிறுவனங்களும் தாராளமாக நிதி அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்தனர்.

அதன்படி கடந்த ஐந்து மாதங்களாக பிஎம் கேர்க்கு நிதிகள் வந்துகொண்டிருக்கின்றன. இதில் மொத்தம் எவ்வளவு நிதி சேர்ந்திருக்கிறது என்று கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் தற்போது பி.எம் கேர் இணையதளத்தில் முதல் ஐந்து நாட்களில் எவ்வளவு நிதி சேர்ந்தது என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பி.எம் கேர் நிவாரண நிதிக்கு முதல் ஐந்து நாளில் மட்டுமே 3 ஆயிரத்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மார்ச் 31 -ம் தேதிக்குப் பிறகு, பெறப்பட்ட நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அதன்படி, ``நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை ஏன் வெளியிடவில்லை?" என்றும், நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட ஏன் பயப்படுகிறீர்கள்? என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது மத்திய அரசு மேல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News >>