கர்நாடகாவில் முழு தளர்வு.. மதுபான பார்கள் திறப்பு.. கொரோனா சோதனை இல்லை..

கர்நாடகாவில் பப் என்றழைக்கப்படும் மதுபான பார்கள் திறப்பதற்கும், ஓட்டல்களில் மதுபானங்கள் சப்ளை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஸ், ரயில்களில் வருவோருக்குப் பரிசோதனையும் தேவையில்லை. தனிமைப்படுத்தவும் தேவையில்லை.கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்வு செய்யப்பட்டன. இது வரை 4 கட்டங்களாகத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில், மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. கடைசியாக, கடந்த 1ம் தேதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் கர்நாடக அரசு கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி முழு தளர்வுகளை அறிவித்து விட்டது. பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும், 9ம் வகுப்புக்கு மேல் மாணவர்களை அழைத்துச் சிறப்பு வகுப்புகளை நடத்த அனுமதித்துள்ளது.அதே போல், பீர் பப் உள்பட மதுபான பார்கள் அனைத்தையும் திறப்பதற்கு அனுமதித்துள்ளது. அந்த பார்களில் அவர்களாகவே சமூக இடைவெளி விட்டு, கொரேனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் போதும். அரசு அதிகாரிகள் சிறப்புப் படை சோதனை என்று எதுவும் கிடையாது.அந்த மாநில கலால் துறை அமைச்சர் ஹெச்.நாகேஷ் கூறுகையில், கடந்த 5 மாதங்களில் மதுபான பார்கள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.1435 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இனிமேலும் பார்களை மூடி வைத்தால், இந்த இழப்பு 3 ஆயிரம் கோடியைத் தாண்டும். எனவே, பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு அரசு அனைத்து துறைகளிலும் தளர்வுகளை அறிவித்திருக்கிறதுஎன்றார்.

மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் வழக்கம் போல் பயணிகளை அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பஸ், ரயில் நிலையங்களில் ஸ்கிரீனிங் என்ற பெயரில் பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் யாரும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியூர்களுக்குச் செல்பவர்களும் முன்பு போல் அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை. மருத்துவப் பரிசோதனைகளும் செய்யத் தேவையில்லை. அதே போல், வீடுகளில் தனிமைப்படுத்துதல், தகரம் அடித்தல் போன்ற எல்லாமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

More News >>