கர்நாடக டிஜிபியின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு
கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய டிஜிபியாக இருப்பவர் ஆர்.பி.சர்மா (59). மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், நேற்று இரவு வீட்டில் வைத்து தன்னுடைய கைத்துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தவறுதலாகத் துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. காயமடைந்த அவரை வீட்டினர் உடனடியாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்ததும் பெங்களூரு காவல் ஆணையாளர் கமல் பண்டிட் மருத்துவமனைக்கு விரைந்து சென்று டிஜிபி சர்மாவிடம் விசாரணை நடத்தினார். தான் தவறுதலாகச் சுட்டுக்கொண்டதாக அவர் ஆணையர் கமல் பண்ட்டிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.