காதல் வாழ்க்கை கசந்திடாமல் இருப்பதற்கான வழிகள் ...

'உறவு' மிகவும் இனிமையான வார்த்தை. அதிலும் தம்பதியருக்குள் உள்ள உறவு தனித்துவம் வாய்ந்தது. சில உறவுகள் ஆரம்பத்தில் மிகவும் இனிமையாக அமையும். நாள்கள் செல்லும்போது கசந்து வெறுப்பு மேலோங்கி விடும். தம்பதியருக்குள் உள்ள உறவு அப்படிப் புறக்கணிக்கத்தக்கதல்ல. ஆனால், உண்மை நிலவரம் அப்படியல்ல. குடும்ப நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. அனைவரையும் அழைத்து ஆடம்பரமாய் இணைந்த தம்பதியர், வழக்கரைஞர்கள் மத்தியில் பிரிந்து போகிறார்கள். சில விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் இல்லறம் இன்பமாய் தொடரும். பல தம்பதியருக்கு முன் மாதிரியாக விளங்கலாம். 25 என்ன, 50 ஆண்டுகள் கடந்தாலும் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக விளங்கும்.

வாக்குவாதம்

பல தம்பதியரிடையே கசப்புக்குக் காரணமாக அமைவது வாக்குவாதம் தான். வாக்குவாதம், வாழ்க்கையையே அசைத்துவிடுகிறது. வாக்குவாதம் ஆரம்பிக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டால் நிதானிக்க வேண்டும். வாக்குவாதத்திற்குக் காரணமான சூழ்நிலை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். தம்பதியர் இருவரும் இணைந்து சூழ்நிலைக்கு எதிராய் நின்று வெற்றி பெற வேண்டுமே தவிர, தாங்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள் அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது சூழ்நிலையை வென்று, இல்லறத்தை வெற்றிகரமாக நடத்தலாம்.

ஈர்ப்பு

'காதலால் கசிந்துருகி...' ஆரம்பிக்கும் இல்வாழ்க்கையில் காலம் செல்ல செல்ல ஒருவரிடத்தில் ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிட்டது போல் தோன்றும். இணையர், வெற்றிகரமாகக் கடக்க வேண்டிய முக்கியமான கட்டம் இது. ஈர்ப்பு குறைய ஆரம்பித்ததுமே நம் மணவாழ்க்கை முடிவை எட்டப்போகிறது என்று நம்ப ஆரம்பிப்பதே பிரச்சனைக்குக் காரணம். நாள்பட்ட உறவில் இது இயற்கையாகத் தோன்றும் எண்ணம். இல்வாழ்க்கை முடிந்து போவதல்ல என்று மனதில் உறுதியாக நம்பினால் எதிர்மறை எண்ணம் விலக ஆரம்பிக்கும். ஒருவரையொருவர் பிரியப்படுத்துவதில் இன்னும் கவனம் செலுத்தினால் 'ஈர்ப்பின்மை' என்ற மேகம் மறைந்து, காதல் வாழ்க்கை தொடரும்.

தாக்குப் பிடிக்குமா?

'இனி வாழ்க்கை ஓடுமா?' என்ற சந்தேகம் சிலருடைய மனதில் எழும். அந்த மனநிலையில் தொடர்ந்து, 'இனி என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும்?' என்ற சந்தேகமும் எழும். ஒரு சந்தேகத்தை இன்னொன்றும் தொடர்ந்துவிட்டால் அவ்வளவுதான்! 'உனக்கும் எனக்கும் ஒத்துப்போகாது போல் தெரிகிறது' என்று உங்கள் சந்தேகத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடக்கூடாது. உங்களுக்குள் அப்படி ஓர் எண்ணம் எழுந்தாலும், உங்களுக்குள்ளே வைத்துக் கொண்டு, உறவு நீடிக்க என்ன செய்யவேண்டுமோ அவற்றைத் தொடர்ந்து, வேகமாகச் செய்து கொண்டே இருங்கள். உறவு நீடிக்குமா? என்ற சந்தேகத்தைக் கடந்து விட்டால், உங்களை எந்த சந்தர்ப்பமும் பிரிக்க முடியாது.

இவரா? அவளா?

நீண்ட கால இல்லற வாழ்க்கை, சில தடுமாற்றங்களைக் கடந்தே வந்திருக்கும். இல்லறத்தின் காலம் அதிகமாகும்போது இடையில் வரும் நபர், ஈர்ப்பு நிறைந்தவராகக் காணப்படலாம். அது ஒரு மாய தோற்றம்தான். தற்காலிகமான ஓர் உறவுக்காக, நிலையான உறவுக்குத் துரோகம் செய்யலாகாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் வாழ்வில் குறுக்கிட்டு, கொஞ்சக் காலத்தில் விலகிவிடக்கூடிய நபர் நிச்சயம் நம் வாழ்க்கைத் துணையை விட முக்கியமானவர் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அலுவலகமாக இருக்கட்டும்; வேறு கூடுகைகளாக இருக்கட்டும்; பொழுதுபோக்கச் செல்லும் இடமாக இருக்கட்டும், எங்கு நம்மோடு நெருங்குபவர்களும் நம் வாழ்க்கைத் துணை அல்ல என்ற தெளிவு இருந்தால் தடுமாற்றம் நம்மைத் தவறி விழச்செய்யாது.

செக்ஸ்

இல்லறம் ஆரம்பித்த நாள்களில் ஒருவரையொருவர் சுற்றி வந்ததுபோல, எப்போதும் இருக்க முடியாது. இல்லறத்தின் முக்கிய அச்சு தாம்பத்ய உறவு. அதில் ஐயமில்லை. ஆனால், பாலுறவில் நாட்டம் குறைகிறது என்பது இல்லறத்தில் இயல்பாக நடக்கும் ஒன்று. நெருக்கம், வயது, பணி அழுத்தம், குடும்ப பொறுப்பு போன்ற பல காரணங்களால் பாலுறவில் நாட்டம் குறையலாம். அதைக் குறித்து இருவருமே பேசுவதே சிறந்தது. வித்தியாசமானவற்றைச் செய்து மீண்டும் காதல் வாழ்வில் ஈடுபட எந்தத் தடையுமேயில்லை. ஒருவரையொருவர் மகிழ்விக்க என்ன செய்யலாம் என்று இருவருமே சிந்திப்பது ஒவ்வொரு நாளையும் இனியதாக்கிடும்.

சிங்கிள்டா!

இல்லறத்தில் இருக்கும் சிலருக்குத் தனியாக இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதுபோன்று ஓர் எண்ணம் ஏற்படும். 'அது சுதந்திரமான வாழ்க்கை' என்ற பொறாமை கூட ஏற்படலாம். இல்லற வாழ்வில் பொறுப்புகள் உண்டு; கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், இன்பமும் உண்டு. நீங்கள் நினைப்பதுபோலன்றி தனியாக இருக்கும் எத்தனையோபேர், துணையின்றி தவிக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, இல்லறத்தை இன்பமாக்கிக்கொள்ள முயற்சிப்பதே புத்திசாலித்தனம். பிரிந்துவிட்ட பிறகு இப்படி ஓர் உறவுக்காக ஏங்குவது முட்டாள்தனமாகவே அமையும்.

More News >>