திமுக, அதிமுகவை எரிச்சலூட்டிய கார்ட்டூன்.. தேமுதிக சுதீஷ் அடித்த பல்டி..
தேமுதிக துணைச் செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை போட்டு, திமுக, அதிமுக கட்சியினரை எரிச்சலூட்டினார். ஆனால், சில மணி நேரத்தில் அதை நீக்கி விட்டு, சமாளிப்பு விளக்கம் கொடுத்தார்.தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்குத் தள்ளி தேமுதிக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், அதற்கு அடுத்து வந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திமுகவிடம் கடைசி வரை பேரம் பேசி விட்டு, இறுதியில் மக்கள் நலக் கூட்டணியில் அந்த கட்சி சேர்ந்து படுதோல்வி அடைந்தது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவா, அதிமுகவா என்று குழம்பி, 2 கூட்டணியிலும் பேரம் பேசியது. ஆனால், முன்கூட்டியே சுதாரித்த டாக்டர் ராமதாஸ், அதிமுக அணியில் 7 பாமகவுக்கு இடங்களைப் பெற்று விட்டார். அதற்குப் பிறகுச் சென்ற தேமுதிகவுக்குக் கிராக்கி ஏற்படவில்லை. அதனால், திமுகவிலும் பேசி பார்த்து விட்டு கடைசியாக அதிமுக அணியில் 4 இடங்களில் அடங்கிப் போனது.இந்த நிலையில், 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக அணியில் முன்கூட்டியே பேசி, அதிக இடங்களைப் பெற்று வெற்றியடைய வேண்டுமென்று தேமுதிகவினர் விரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தேமுதிக பொருளாளரான பிரேமலதா கடந்த வாரம் அளித்த பேட்டியில் திமுகவையும், அதிமுகவையும் எரிச்சல் படுத்தினார்.
பரமக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தேமுதிக தொண்டர்களின் விருப்பம். அதே சமயம், டிசம்பர் அல்லது ஜனவரியில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டிப் பேசி, கூட்டணி குறித்து நல்ல முடிவை கேப்டன் அறிவிப்பார். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கிறதா. பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். திமுக, அதிமுக இல்லாத ஆட்சி வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறினார். இதனால், திமுக, அதிமுக கட்சியினர், இவர்கள் இப்பவே ரொம்ப கிராக்கி பண்ணுகிறார்கள். இவர்களைக் கூட்டணியில் சேர்த்தால் சரியாக வருமா... என்று பேசத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, தேமுதிகவின் துணை செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ், தனது முகநூலில் ஒரு பழைய கார்ட்டூனை போட்டார். அது தினமலர் நாளிதழில் முன்பு வெளியான கார்ட்டூன். அதில், கூட்டணிக்காக விஜயகாந்த் காலடியில் எல்லா கட்சித் தலைவர்களும் விழுந்து கிடப்பது போன்று சித்திரம் வரையப்பட்டிருந்தது. அதிலும், கருணாநிதியைக் குறிப்பிடுவது போல் மஞ்சள் துண்டு போர்த்திய ஒருவர் விழுந்து கிடந்தார். சுதீஷ் பதிவிட்ட இந்த தினமலர் கார்ட்டூன் வைரலான செய்தியாக மாறியது. இதையடுத்து, திமுகவிலும், அதிமுகவிலும் இது பலருக்கும் எரிச்சலை ஊட்டியது. இது பற்றி திமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், என்னமோ இவர்கள் இல்லாவிட்டால் ஆட்சியே அமையாது போன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் இவர்களுக்கு அனுபவம் போதாது. அதனால்தான் கட்சி இந்த நிலைமைக்கு வந்து விட்டது என்றார்.
அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விடவே சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் இருந்து அந்த கார்ட்டூனை நீக்கினார். அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார். அதாவது, தினமலர் நாளிதழ் நேற்று ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது. அதில் விஜயகாந்த்தை பிரேமலதா ஏலம் போடுவது போல் சித்திரம் வரைந்திருக்கிறார்கள். இதே தினமலர் பத்திரிகை முன்பு, விஜயகாந்த் காலடியில் எல்லோரும் விழுந்து கிடப்பதாகச் சித்திரம் போட்டிருக்கிறார்களே... அந்த வித்தியாசத்தைக் காட்டவே பதிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி கார்ட்டூனை பதிவிட்டு நீக்கியதை தேமுதிகவினர் சிலருக்கே பிடிக்கவில்லை. கார்ட்டூன் நீக்கப்பட்டாலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.