கடைசியில் அதுவும் சம்பவித்து விட்டது குட்டி போட்ட கோழி

விலங்கினங்கள் தான் குட்டி போடும்... பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இதுதான் நடைமுறை. ஆனால் உலகில் அவ்வப்போது நடைமுறைக்கு மாறாக ஏதாவது சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது பினராயி என்ற ஒரு கிராமம். இந்த கிராமத்தில் பீடி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். தற்போது கொரோனோ காலம் என்பதால் தொழில் இழந்த பீடித் தொழிலாளர்களுக்கு வீடுகளில் வளர்க்கக் குறைந்த விலையில் கோழிகள் கொடுக்கப்பட்டன.

இதன்படி அப்பகுதியைச் சேர்ந்த புஷ்பன் என்ற தொழிலாளிக்கும் கோழிகள் கிடைத்தன. இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் வளர்த்து வந்த ஒரு கோழி முட்டை போடுவதற்குப் பதிலாக ஒரு குஞ்சை பிரசவித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து புஷ்பன் கூறியது: கடந்த சில தினங்களாகவே இந்த கோழி போடும் முட்டையில் 2 மஞ்சள் கருக்கள் இருந்தன.அது எங்களுக்கு அதிசயமாக இருந்தது. இந்நிலையில் நேற்று அந்த கோழியின் அருகே ஒரு குஞ்சு இருந்ததைப் பார்த்தோம்.

ஆனால் அதன் அருகே முட்டை தோடுகள் எதுவும் காணப்படவில்லை. கோழிக்கு அருகே சென்று பார்த்தபோது அதன் உடலில் ரத்தம் காணப்பட்டது. ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அந்த இடத்திலேயே அந்த கோழி இறந்துவிட்டது. நாங்கள் இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் ஒரு நாள் வரை வைத்திருந்து விட்டு அந்தக் கோழியை நாங்கள் புதைத்து விட்டோம் என்று கூறினார். இது குறித்து அறிந்த அப்பகுதியினர் குஞ்சு பிரசவித்த கோழியைப் பார்க்கத் திரண்டனர். தற்போது குஞ்சு மட்டுமே நலமாக உள்ளது.

More News >>