உங்களைப் பணக்காரர் ஆக்கும் ஒரு குறிக்கோள்!- நம்மால் முடியும் பாகம்-2
ஒரு புதிய ஆண்டு பிறக்கும்போது கூடவே புதிய பாதைகளும் நம்பிக்கைகளும் பிறக்கும். புதிய நம்பிக்கையால் புதிய திட்டங்களும் தீர்மானங்களும் உடன் வரும். ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாளும் கடமை கண்ணாயிரமாக ‘புத்தாண்டு தீர்மானம்’ எடுப்போம். அதிகப்பட்சம் ஆறு மாதங்களே. அதன் பிறகு எந்தவொரு தீர்மானமும் நம் கூகுள் ‘ஹிஸ்டரி’ பேஜில் கூட இருக்காது.
உடல் எடையைக் குறைக்க வேண்டும், தினமும் ஜிம் போக வேண்டும், அதிகாலையில் எழ வேண்டும் என எத்தனையோ தீர்மானம் எடுத்திருப்போம். ஆனால், தமிழக சட்டசபை உறுப்பினர்கள் போல நம் மனம் வெறும் தீர்மானத்துடனே நின்றுவிடும். உடல் வளத்துக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவைத்தை நம் செல்வ வளத்துக்குக் கொடுத்தால் மட்டுமே வாழ்க்கை வளமாகும்.
செல்வ வளம் வேண்டுமென்றால் பணம் சம்பாதிப்பதை மட்டுமல்ல பணத்தை சேமிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பணம் சம்பாதிப்பதைவிட பணத்தை சேமிப்பதற்குத்தான் பெரு முயற்சி தேவைப்படும். அதுக்காக சில ‘ஸ்மார்ட்’ வழிமுறைகளை வகுத்தளித்துள்ளனர் பொருளாதார வல்லுநர்கள்.
‘தெளிவான’ குறிக்கோள்: குறிக்கோள் வைத்திருப்பதைவிட தெளிவான குறிக்கோள் வைத்திருப்பது அவசியம். உதாரணமாக, பணம் சம்பாதிக்க வேண்டும் எனக் குறிக்கோள் வைத்திருக்காமல் அடுத்த ஓர் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் நாம் சேமித்திருக்க வேண்டும் என்ற தெளிவான குறிக்கோளை உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.
அளவு வேண்டும்: பணத்தை சேமிக்க வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் அமைத்தவுடன் ஒரு சின்ன சறுக்கலுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் என்பது பெரிய தொகையாகத் தெரியலாம். அதனால் ஒரு ஆண்டு என்பதை நான்காகப் பிரித்துக்கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்திருக்க வேண்டும் என நிர்ணயம் செய்தால் சேமிப்பு சுமையாகவே தெரியாது.
நடைமுறைக்கு ஒத்துவர வேண்டும்: நடைமுறையில் ஒரு குறிக்கோள் பொருந்தும் என்றால் மட்டுமே அதை நீங்கள் குறிக்கோளாகவே வைக்க வேண்டும். உதாரணமாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் மாதம் 15ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும் எனக் குறிக்கோள் வைத்தால் அது நடைமுறைக்கு ஒத்துவராது. அதுவே ஐந்தாயிரம் ரூபாய் என்றால் பட்ஜெட் சரியாக இருக்கும்.
யதார்த்தமான குறிக்கோள்: உங்கள் குறிக்கோள் நடைமுறைக்கும் உங்கள் வாழ்க்கை முறைக்கும் ஒத்துவரலாம். ஆனால், சில நேரங்களில் உங்கள் பணம் சேமிப்பு குறிக்கோளை அடைய நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் அத்தியாவசத்துக்குக் கூட சமரசம் செய்துகொள்ளும் நிலை வரக்கூடாது.
நேரம்: பணம் சார்ந்த ஒவ்வொரு குறிக்கோளுக்கும் கால நேர நிர்ணயம் தேவை. ஒரு குறிப்பிட்ட காலத்தை நமது குறிக்கோளுக்காக நிர்ணயம் செய்யாவிட்டால் நமக்கு நாமே எந்தவொரு உத்வேகமும் இல்லாமல் இருப்போம். உற்சாகத்துடன் உங்கள் குறிக்கோள் பாதையில் நீங்கள் பயணிக்க உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் உங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒருவரை உங்களுடன் சேர்த்துக்கொண்டு பயணியுங்கள். குறிக்கோளை தொய்வு இன்றி அடைய முடியும்!
தொடரும்...
-முனைவர் கோகுல் ஜெயபால்
இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....
****************************************************************************
கோகுல் ஜெயபால் ஒரு கனடாவாழ் இந்தியர் ஆவார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் டொரன்டோ நகரில் வசித்து வருகிறார். உயிரியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கோகுல், பயிற்சியாளர், எழுத்தாளர், மனித நேய ஆர்வலர், முதலீட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். தனது விடாமுயற்சி மற்றும் சரியான திட்டமிட்ட முதலீடுகள் மூலம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்துள்ளார். தான் விரும்பும் பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com