மதவாத பேச்சு : பாஜக எம்எல்ஏவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் நீக்கம்
சமீபகாலமாக பேஸ்புக் மீது காங்கிரஸ் உள்படக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை பேஸ்புக் வெளியிட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. வால் ஸ்ட்ரீட் பத்திரிகைதான் இந்த குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தது. ராகுல் காந்தி உள்படப் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கின் இந்தியத் தலைவரைப் பாராளுமன்ற குழு அழைத்து விளக்கம் கேட்டது. இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான ராஜாசிங் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் மதவாதத்தைத் தூண்டும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜா சிங்கின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகள் உடனடியாக நீக்கப்பட்டன. பேஸ்புக்கின் கோட்பாடுகளை மீறிச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.