சினிமா வாய்ப்பை மறுத்த ஆசிரியைக்கு நேர்ந்த கதி
கடந்த சில மாதங்களாக கேரளாவில் சினிமா நடிகை போன்று ஒரு பள்ளி ஆசிரியை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் அவர் ஒன்றாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை.... இவர் எப்படி பிரபலமானார் என்பதை பார்ப்போம்.... தற்போது கொரோனா காலம் என்பதால் கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. கேரள அரசு நடத்தும் கல்வி சேனல் மூலமும், சமூக இணையத்தளங்கள் மூலமும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்றாம் வகுப்புக்கு பாடம் எடுத்த சாய் ஸ்வேதா என்ற ஆசிரியையின் வகுப்புகள் மிகவும் பிரபலமாகின.
குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் பாட்டு பாடியும், நடனமாடியும் கதைகளை கூறினார். இதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் இவரை மிகவும் பிடித்துப்போனது. ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதும் இவர் பிரபலமானார். இதையடுத்து இவரை வைத்து ஏராளமான நிறுவனங்கள் விளம்பரம் செய்ய தொடங்கின. முதலில் இந்த ஆசிரியை வகுப்பு எடுப்பதை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக இணைதளங்களில் பரவினாலும், அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால் அனைவரும் தங்களது மீம்ஸ்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரை அணுகிய மலையாள சினிமா துறையை சேர்ந்த ஒருவர், சினிமாவில் நடிக்க தயாரா என்று கேட்டுள்ளார். ஆனால் அவர் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். இதன் பின்னர் சமூக இணையதளங்களில் ஆசிரியை சாய் ஸ்வேதா குறித்து ஆபாசமான கருத்துகள் பகிரப்பட்டன. இது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறிய நபர் தான் இதற்கு காரணம் என அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக முதல்வரிடம் புகார் செய்யப் போவதாக சாய் ஸ்வேதா கூறியுள்ளார்.