ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம். கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.
திட்டங்கள்
10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி , தனியார் தொலைதூரக் கல்வி படித்தவர்கள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளை உடைய பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெளலாம். இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 25000 மற்றும் 4 கிராம் தங்க திருமாங்கல்யம் செய்து தரப்படும்.
அடுத்ததாக , பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கு ரூபாய் 50000 மற்றும் 4 கிராம் தங்க திருமாங்கல்யம் செய்து தரப்படும்.
* ஆண்டு வருமானம் 75000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* மேற்கூறிய ரொக்கத்தொகை பெற்றோரிடம் வழங்கப்படும் . பெற்றோர் இல்லையெனில் மணமகளிடம் வழங்கப்படும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் 2. திருமண பத்திரிக்கை3. வருமான சான்று 4. பத்தாம் வகுப்பு/பட்டய / பட்டபடிப்பு சான்றிதழ் 5. முதல் திருமண சான்று
எங்கு விண்ணப்பிக்கலாம் ?
மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம். தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.