இம்மாத இறுதி அதிகபட்சம் அடுத்த மாத முதல் வாரம்!..சசிகலா விடுதலை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு?
பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சமீபத்தில் போட்ட ட்வீட் தமிழக அரசியல் களத்தை சற்று பரபரப்புக்குள்ளாக்கியது. இதையடுத்து அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை சசிகலா குறித்து கருத்து என்கிற பெயரில் தங்கள் உதறல்களை கொட்டினர். ஆனால் ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா விடுதலையாகவில்லை. ஆனால் மார்ச் மாதமே சசிகலா விடுதலை ஆகி இருக்க வேண்டும்.
விடுமுறை நாட்கள், நன்னடத்தை விதிகள், தண்டனைக்கு முன்பே ஏற்கெனவே சிறையிலிருந்த நாட்கள் இதையெல்லாம் கணக்கில் கொண்டால் கடந்த மார்ச் மாதம் சிறைத்தண்டனை முடிந்துவிட்டது. இருந்தும் அவர்வெளியாகவில்லை. இதற்கிடையே ஆசிர்வாதம் ஆச்சரியத் தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது யூடியூப் சேனலில், ஆகஸ்ட் 28-ம் தேதி சசிகலா நிச்சயம் விடுதலை ஆவார். சசிகலா விடுதலை தொடர்பாகக் கர்நாடக அரசிடமிருந்து ஆகஸ்ட் 16-ம் தேதி மதியம் இரண்டரை மணிக்கு இ-மெயில் தகவல் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் போயிருக்கிறது" என்று புதுத் தகவலை தெரிவித்தார்.
ஆனால், ``சசிகலா விடுதலை குறித்து கர்நாடக சிறைத் துறை எங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்கப்படும். இதுவரை அப்படி விடுதலை தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை" என்று சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்து வந்தார். இதனால் இது நாள் வரை அவர் விடுதலை ஆவதற்கான அறிகுறியே தெரியாமல் இருந்து வருகிறது.
இப்போது இதே செந்தூர்பாண்டியன், ``இந்த வார இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவார். சிறை நன்னடத்தை விதிகளின்படி மார்ச் மாதமே விடுதலை ஆவதற்கான தகுதியை சசிகலா பெற்றுவிட்டார்" என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக இருக்கிறது.