அமெரிக்கா பல்கலைக்கழகமாக மாறும் சதாம் உசேனின் அரண்மனை
ஈராக் நாட்டில் உள்ள சதாம் உசேனின் அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்ற உள்ளதாக ஈராக் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் நாட்டு அதிபராக தொடர்ந்து 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் சதாம் உசேன். பாக்தாத் நகரில் உள்ள ரத்வானியா அரண்மனையில் தான் சதாம் உசேன் வாழ்ந்து வந்தார்.
கொடிகட்டி ஆட்சியை தக்க வைத்து வந்த சதாம் உசேனின் ஆட்சி 2003ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு கவிழ்ந்தது. தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 13ம் தேதி திக்ரித் நகருக்கு அருகே பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை போலீசார் கைது செய்தனர். சதாம் உசேன் மீது மனித உரிமை மீறல் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் முடிவில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2006ம் ஆண்டு, டிசம்பர் 30ம் தேதி அவர் தூக்கில் போடப்பட்டார். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சதாம் உசேன் வாழ்ந்த ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தியை ஈராக் அரசுக்கு சொந்தமான அல் சபா என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, அரசு சொத்துக்கள் துறையின் தலைவர் அகமது அரல் ருபாயி கூறுகையில், “பாக்தாத்தில் உள்ள ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட கமிஷன் முடிவு செய்து உள்ளது” என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com