27 வருடங்களுக்கு முன் 3 குழந்தைகளை திருடிய பெண்ணுக்கு மரண தண்டனை

சவுதியைச் சேர்ந்தவர் மரியம். இரண்டு திருமணங்களைச் செய்துள்ள இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இவருக்கு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1993ல் சவுதியில் உள்ள கத்தீஃப் என்ற மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் திருடினார். இதன் பின்னர் 1999ல் தமாம் மருத்துவமனையிலிருந்து மேலும் 2 ஆண் குழந்தைகளைத் திருடினார். இந்த இரு மருத்துவமனைகளுக்கும் நர்ஸ் வேடத்தில் சென்று தான் இவர் குழந்தைகளைத் திருடினார். ஒரு குழந்தைக்குக் கணவனின் அனுமதியுடன் குடும்ப அட்டையில் இவர் பெயர் சேர்த்தார்.

ஆனால் மற்ற இரண்டு குழந்தைகளின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்கச் சேர்க்க அவரது இரண்டாவது கணவர் மறுத்துவிட்டார். இதனால் 20 வருடங்களுக்கு மேலாக மரியத்தால் அவர்கள் இருவரது பெயரையும் குடும்ப அட்டையில் சேர்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அந்த இருவரின் பெயரை குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக அவர் தமாம் அரசு அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அவர் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.24 வருடங்களுக்குப் பின்னர் குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதற்கு, அந்த இரண்டு குழந்தைகளும் சாலையில் அனாதையாக நின்று கொண்டிருந்ததாகவும், அது குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அவர்களை எடுத்து வளர்த்ததாகவும் கூறியுள்ளார். ஆனாலும் அதை நம்பாத அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் அந்த இரண்டு பேரை மட்டுமில்லாமல் மொத்தம் மூன்று குழந்தைகளை 25 வருடங்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து மரியத்தையும், அவருக்கு உதவிய மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தமாம் கிரிமினல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மரியத்திற்கு மரண தண்டனையும், இன்னொருவருக்கு 25 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

More News >>